Wednesday, May 20, 2020

வெயில்



சுடரொளி வீசி சுற்றி 
   சுழலும்  சூரியனே
சுட்டெரிக்கும் வெயில்
   ஏனோ ஏனோ

கடும் சினம்  
   கொண்டது போல நீ
கடும் கனல் வெயில்
   தந்தது ஏனோ

தகிக்கும் தழல் தந்து
   தாண்டவமாடி நின்று
தாங்காத தாகத்தினை
   தயங்காது தந்தாயே

வற்றாத ஜீவ நதியும்
   வற்றி தான் போனதே
வற்றாத நதி இனி எம்
   விழி சிந்தும் நீர் தான்

நீர் நதி ஓடம் யாவும்
   பாலை வனம் ஆனதே
நில வளமும் குன்றி தான்
   விவசாயம் போனதே

நீர் இன்றி வாடிடும்
   வையத்து உயிரினத்தை
நீர் இன்று இன்னும்
   வாட்டுவது தகுமோ

நிழல் தந்திட மரம்
   நடாத எம் குற்றமோ
நிழல் புகா காடு தனை
   அழித்த குற்றமோ

சுற்றுப் புற சூழலை
   கெடுத்த குற்றமோ
சுகாதார  கேட்டினை
   விளைத்த குற்றமோ

எரி பொருள் எரித்து
   புவி வெப்ப மயமானதாலோ
பருவ நிலை மாறிட
   பக்க துணையாயிருந்ததாலோ

மிகுந்த கரிமில வாயு 
  வெளியேற்றத்தாலோ
வளி மண்டலம் தனிலே
   ஓட்டை விழுந்ததாலோ

ஆயினும் ஆதவனே
   பிழையாவும் பொறுப்பாய்
ஆதரவு கரம் தந்து
   ஆறுதலாய் இருப்பாய்

சிவ ராம தாஸன் சிரம் 
   பணிந்து விழைகிறேன்
சினம் தணிந்து சுடர்
   தணிந்து சுழல்வாயே 

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: