Friday, May 15, 2020

வரதட்சணை


திருமணம் என்றாலே

நினைவுக்கு வருவது

வரதட்சணை எனும்

சொல் அன்றோ.

 

ஆண்டாண்டு காலமாய்

வழக்கத்தில் இருந்திடும்

கட்டாயப் பழக்கமாய்

மாறியது அன்றோ.

 

முதல் குடிமகன் முதல்

கடை குடிமகன் வரை

மத இன பேதமின்றி

இதில் அடங்குவரன்றோ

 

பட்டித் தொட்டியில் படித்தாலும்

கட்டுக் கட்டாய் துட்டுக் கொடுத்து

பட்டம் வாங்கி வந்து நின்றாலும்

வட்டியுடன் வாங்குவது  இதிலன்றோ

 

கட்டித் தங்கம் கி

லோ கணக்கிலே

பெட்டிப் பெட்டியாக

பணமுருளும்

 

பட்டு வேட்டி

சட்டை முதலாக

கேட்டு வாங்குவது

இதிலன்றோ

 

அத்தைப் பெண்ணாய் இருந்தாலும்

வித்தை பட்டம் வாங்கினாலும்

பத்தைக் கொண்டு வா வா

சொத்தைக்  கொண்டு வா  என்பரே

 

மன சாட்சியைக் கழற்றி வைத்து

மான மரியாதை ஒதுக்கி வைத்து

பணத்தாசைப் பிடித்து அலைந்து

நாணம் வெட்கம் இன்றி கேட்பரே

 

இல்லாளைக் கரம் பிடித்திடும்

வரம் ஒன்றே போதாதா

இல்லறத்தில் அடி வைத்திட

வரதட்சணை வேண்டுவதோ

 

வங்கிக் கணக்கில் வைப்பு நிதி

வீடு மனை சொத்து மற்றும்

வாகனமும் கேட்டு நின்று

வரதட்சணையில்  இல் புகுவதோ

 

அம்மி மிதித்து கரம் பிடித்தவளை

அம்மா வீட்டுக்குத்

துரத்தி அனுப்புவதோ

அக்னி முன்னே


நாண் பூட்டியவளை

அக்னிப் பிரவேசம்

செய்யச் சொல்வதோ.

 

தஞ்சம் நீ என்று வந்தவளை

நெஞ்சம் தனில் புகுந்தவளை

மஞ்சம் தனைப் பகிர்ந்தவளை

வஞ்சம் புரியலாகுமோ.

 

நாள் ஒன்று இரவிலே

இழி தொழில் புரிந்து

பணம் பெறும் பேதையை

விலை மகள் என்பரே

 

வாழ் நாள் வாழ்வுக்கு

இழிவாய் யாவும் கேட்டுத்

தன்னையே விற்பவர்

விலை மகன் அன்றோ.

 

வர லட்சுமி தேவியொடு வாழ

வரம் தனை நீ பெற்றிருக்க

வர தட்சணைப் பேயொடு வாழ

வரம் கேட்பது ஏனோ ஏனோ.



சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்


No comments: