Monday, May 18, 2020

தூது தர்மம்



விபீடணன் அறிவுரை

தூது சொல்ல வந்த
தூதனைக் கொல்லலாகுமோ
தசமுக இலங்கை வேந்தனே......
தூதனைக் கொல்லலாகுமோ 

முக்கண்ணன் அருள் பெற்று
மூவுலகு ஆண்டு நின்றாய்
மூதறிஞர் இழிக்கும் செயலை
முனைவது தான் நியாயமோ

மானுடர் அனுப்பி வைத்த
மந்தி தானென  நினையாதே
மதி நுட்பம் நிறைந்ததொரு
மாவீரன் இவரன்றோ

மதி கெட்ட செயலை தான்
மறந்தும் நீ புரியாதே
மரபு அறம் மீறுதல் நின்
மகுடத்திற்கு அழிவு அன்றோ

பதி விரதை சீதையை
புண்படுத்தலாகுமோ
பிறன் மனை தொட்டால் நின்
சிரம் தான் சிதைந்திடுமே

அடாத செயல் தனில் நீ
விடாது நின்றனையே
இடர் தருமென அறிந்தும் நீ
மடமையை விடாததேனோ

ஈசன் பட்டம் கொண்ட உனக்கு
ஈனச் செயல் தான் ஏனோ
ஈரேழு புவனம் புகழும்
ஈடில்லா ராமன் சரண் புகுவாய்

மந்தி மானுடர் கரத்தாலே
முடிவென வரம் பெற்றாய்
முடி குலம் தனை அழிக்கும்
மாபாபச் செயலை விடாய்

சேதி சொல்ல வந்த தூதனை
நீதி எடுத்துரைத்தவனை
கைதியாய் பிணை பிடிப்பது
விதி செய் கொடுமையன்றோ

அந்தகன் அனுப்பிய தூதனை
அனுமனை விடுத்தால் தானே உன்
அருமை பெருமை கூறிட
அரும் வாய்ப்பு உண்டன்றோ

அருமை மிகு என் அண்ணனே
அன்பு உம்பி செவி சாய்ப்பாய்
அன்னை சீதை தேவியையும்
அனுமனையும் விடுவிப்பாய்

இடுத்துரைக்கும் அறிவுதனை
இயம்பிடும் என் சொல் கேளாய்
இல்லையெனில் இராவணேஸா
இலங்கையுடன் நாம் அழிவோம்.

தூது சொல்ல வந்த
தூதனைக் கொல்லலாகுமோ
தசமுக இலங்கை வேந்தனே......
தூதனைக் கொல்லலாகுமோ 

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: