Tuesday, May 19, 2020

நெகிழி



நெகிழி குவியலில் குன்றென
நிறைந்தது நானிலமே
நஞ்சக் குவியலாய் மாறியது
நானிலமே அதனாலே

வேதிப் பொருளாய்
விரைந்து வந்ததே
வேதனையை அள்ளியே
விரைவாய் தந்ததே

எளிதில் மட்காத
பொருள் இதுவே
என்றென்றும் நமக்கிது
கெடுதல் தருமே

நெகிழிக் கழிவுகள் பெரும் 
தொல்லையன்றோ
நெகிழும் தன்மை தனைக்
கொண்டதன்றோ

அன்றாடப் பயன்பாட்டாய்
மாறியது இதுவே
அவதிக்கு உள்ளானோம்
இதனால் தானே

கால்நடைகள் உண்ணுவதால்
பெரும் அவதி அன்றோ
கால்வாய் சாக்கடைகள்
அடைக்கும் அன்றோ

நெகிழிக் குடுவைத் தேனீர்
உடலுக்கு ஊறு அன்றோ
நிலத்தடி நீர் கெடுக்கும்
செய்கைப் பொருளன்றோ

இயற்கையை சீரழிக்கும்
செயற்கைப் பொருளே
இவ்வுலகை பரவி நிற்கும்
நாகரீகப் பொருளே

மாசு தனைப் பரப்பிடும்
தன்மை இதுவே
மாந்தர் குலம் அழிக்க
வந்த பொருள் இதுவே

நெகிழியின் மோகத்தில்
மூழ்கி இருந்தோம்
நோய்களை விருந்தோம்பி
வரவேற்று நின்றோம்

புற்று நோய் தனை
எளிதில் கொணருமே
அணு குண்டைவிட
மோசமான பொருளே

குழந்தைச் செல்வம் 
கெடுத்து மலடு தந்தது
குலம் சந்ததியை
வளர்க்காது கேடு தந்தது

பதப் படுத்தப்பட்ட
நெகிழ் உணவினை
புறப்படுத்துவோம் அறவே
புறப்படுத்துவோம்

மறு சுழற்சி மறு பயன்பாடு
மனதில் கொள்வோம்
மக்கள் இதில் உறுதியாய் 
வெற்றி காண்போம்

விவசாயம் வேளாண்மை
பாதித்தது இதனாலே
வானிலை சுற்றுச்சூழல்
கெட்டது இதனாலே

நெகிழியைத் தவிர்த்தால்
தவிப்பு இல்லையே
நீர் நிலை நிலங்களுக்கு
பாதிப்பு இல்லையே

நெகிழியைத் தவிர்த்தால்
தூய்மைக் கிட்டுமே
இயற்கையைப் போற்றினால்
பசுமை கிட்டுமே

உலகில் நெகிழி வேண்டாமென
உறுதிக் கொள்வோம்
உளமாற விலகாது
உறுதியாய் இருப்போம்

மாசு தனை மூழ்கடிக்கும்
நெகிழைத் தடுப்போம்
மாசு இலா சூழல் தனில்
நிறைவு காண்போம்

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: