Friday, May 15, 2020

வர்தா புயல் மழை


வருவாய் வருவாயென

நினைத்திருந்தோம்

பொழிவாய் பொழிவாயென

காத்திருந்தோம்

தருவாய் வளம் தருவாயென

வாழ்ந்திருந்தோம்

வாராதா மழை வாராதா

யெனப் பார்த்திருந்தோம்

 

வந்தது வந்தாய் ஒரு

துணையுடன் வந்தாய்

வர்தா புயலின்

துணையுடன் வந்தாய்

சீற்றம் மிகுந்து

பாய்ந்து வந்தாய்

சூறாவளிக் காற்றுடன்

சுழன்று வந்தாய்

 

மும்மாதம் பொழிந்து

முறையுடன் வந்தால்

போகம் மூவென

நல்வளம் காண்போம்

முறை தவறி வந்திங்கே

கொட்டித் தீர்த்தால்

வேகம் கண்டிங்கு

எங்கனம் செல்வோம்?

 

மரங்களை வளர்த்து

இயற்கை காத்தால்

மழை பொழிந்திட

வளம் காண்பென்பர்

மரங்களை சாய்த்து

வேரொடு களைந்தால்

மழையே நாங்கள்

வளம் காண்பதெப்படி?

  

சாலையும் கெட்டது

சோலையும் கெட்டது

வேலையும் கெட்டது

உன் வேகத்தாலே

பொருள் சேதமோ

உயிர் சேதமோ பலவே

தாளா வேதனை

பாரா சோதனை பலவே

 

கோபம் ஏனோ ஏனோ

சீற்றம் ஏனோ ஏனோ

வேகம் ஏனோ ஏனோ கோர

தாண்டவம் தான் ஏனோ

இயல்பு வாழ்வினை

கெடுத்தது ஏனோ ஏனோ

தமிழகத்தைப் புரட்டி

போட்டது ஏனோ ஏனோ

 

புயலொடு வந்து

பேயெனப் பொழிந்து

சீர்வளம் கெட்டிட

துணை போகாதே

சில்லென காற்றுடன்

மெல்லென பொழிந்து

சீர் வளம் தந்திட்டு

நல்லன புரிவாய்.


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்


 


No comments: