Friday, May 15, 2020

முதுமை 1



தளிர் நடை நடையிலே

தடுமாறி நடக்கையிலே

துணைக்கரம் நாடுவது

இளம்பிஞ்சு பருவமன்றோ

 

தளர் நடை நடையிலே

தள்ளாடி நடக்கையிலே

துணைக்கரம் நாடுவதும்

முதுமைப் பருவமன்றோ

 

சக்கர வண்டி தனில்

சுற்றி சுற்றி சுற்றி வந்து

முக்காலில் நடை பயின்று

ஆடும் பருவம் பிஞ்சிலன்றோ

 

முக்காலில் ஊன்றி நின்று

முடியாமல் நடை நடந்து

சக்கரத்தில் சுற்றி வந்து

திண்டாடும் பருவம் முதுமையன்றோ

 

அறிவைத் தேடி நின்று

ஆளாய் பறந்து நின்று

அனுபவம் தேடும் பருவம்

இளமைப் பருவத்த்திலன்றோ

 

அறிவைத் தந்து நின்று

அனுபவம் பகிர்ந்து நின்று

அசை போடும் பருவம்

முதுமைப் பருவம் அன்றோ

 

இளமைப் பருவத்து பல்

முளையா பொக்கை சிரிப்பும்

முதுமைப் பருவத்து பல்

விழுந்த பொக்கை சிரிப்பும்

 

கள்ளமிலா மனதைக்

காட்டும் அன்றோ

உள்ளத்து உவகையைக்

உணர்த்தும் அன்றோ

 

இளம் பருவத்து பிராயத்தை

இனிதாய் கடந்திட

தன்னலம் பாரா

தந்தை தாயின் கடமையன்றோ

 

முதுமைப் பிராயத்தை

சுகமாய் கடந்திட

உறுதுணையாய் நிற்பது

தனையனின் கடமையன்றோ

 

 அன்பைத் தேடி நிற்கும்

அரவணைப்பை நாடி  நிற்கும்

ஆதரவை எதிர் நோக்கும்

பருவம் இவ்விரு பருவமன்றோ

 

முதுமை என்பது ஒரு

சாபம் அல்ல

இயற்கை விதித்த

நியதி அன்றோ

 

அனுபவக் குவியலின்

சிகரம் அன்றோ

குழந்தைப் பருவத்தின்

பிம்பம் அன்றோ



சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்


No comments: