Sunday, June 21, 2020

தந்தையர் தினம் 2


அறிவை தந்து நின்று
ஆசானைக் காட்டி நின்று
இறை வழி காட்டி நின்று
ஈகை தனை சொல்லி நின்று
உழைப்பில் உயர்வு காட்டி
ஊக்கத்தை தந்து நின்று
எக்காலமும் துணை நின்று
ஏணியாய் உயர்த்தி நின்று
ஐயம் யாவும் தீர்த்து நின்று
ஒழுக்கத்தைப் பேணி நின்று
ஓயாது ஓடி பாடுபட்டு
ஔவியம் ஏதும் இலாது
இஃதே.வாழ்க்கையைக் காட்டுவார்
தந்தையெனும் தெய்வமே

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

தந்தையர் தினம்






அவனியில் எனக்கோர்
பிறவி தந்தார்
அவருக்கு தந்தையெனும்
பெருமை தந்தேன் (அ)

அம்மை என்னும் முன்
எதிர் தெய்வம்
காட்டிய மற்றோர் முன்
எதிர் தெய்வமன்றோ

அவர் இல்லை எனில்
நான் என்பது ஏது 
அதை எடுத்துரைக்கும்
இக்கவிதை ஏது ? (அ)

தன்னலம் மறந்து என்னைக்
காத்தவள் அன்னையன்றோ
தன்னையே மறந்து என்னைக்
காத்தவர் தந்தையன்றோ

தந்தையின் பெருமை
தான் உணரார்
தந்தையான பின்னே
தான் உணர்வார் (அ)

இருக்கும் பொழுது
அருமை அறியார் பின்
இல்லாத பொழுது
வெறுமை உணர்வார்

அனைத்தும் பிள்ளைக்கு
என தான் வாழ்வார்
அனைத்தும் தந்து நின்ற
ஆசான் ஆவார் (அ)

கல்விக் கண்ணைத் திறந்து 
அறிவுச் செல்வம் தந்து
அன்பும் பண்பும் காட்டி
ஆருயிர் ஒழுக்கம் காட்டி

தன்னம்பிக்கை யாவும் தந்து
ஊக்கம் உற்சாகம் மூட்டி
நற்பண்பாளனாய் ஆக்கிய
தந்தைக்கு வந்தனம் ! (அ)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்




Sunday, June 14, 2020

இரத்த தானம் தினம்









தானத்தில் சிறந்த
தானம் அன்ன
தானமும்  இரத்த
தானமும் அன்றோ (தா)

வாடும் பசியாற்ற
அன்ன தானமும்
வாழும் உயிர் காக்க
இரத்த தானமும்

ஈடு இணையற்ற
தானம் அன்றோ
மாந்தர் பசி தீர்த்து
உயிர் காக்கும் தானமே (தா)

இரத்த தானம் புரிவதால்
உபரி இரும்பு சத்து
நீங்கும் அன்றோ இதய
நோய் தடுக்குமன்றோ

இரத்த தானம் புரிந்திட
புதிய இரத்தம் ஊறுமே
புது இரத்தம் சுரப்பதால்
ஆரோக்கியம் நல்குமே (தா)

இரத்த தானம் கொடுப்போரும்
இரத்த தானம் பெறுவோரும்
நற் பயன் பெறுவாரே
புது வாழ்வு அடைவாரே

புது செல்கள் உருவாகுமே
புற்று நோயைத் தடுக்குமே
இரத்த தானம் புரிவோமே
இனிய உயிர் காப்போமே (தா)

சோமயாஜிலு சந்தர் (@)
சிவ ராம தாஸன்

Friday, June 12, 2020

கடலே ! கடலலையே !






கடலே ! கடலலையே !
ஏனிந்த ஆரவாரம் !

உலகில் மூன்றில் இரு 
பங்கு கொண்டதாலோ
நீண்டு பரந்து விரிந்து
நிறைந்து நின்றதாலோ

கண் கவர் எழில் நீல
வண்ணம் கொண்டதாலோ
வான் எழில் மதி மடந்தை
உனைக் காண்பதாலோ (க)

சினம் வந்தால் சீற்றம்
கொண்டு எழுகின்றாய்
முழு மதி கண்டு உவகை 
கொண்டு பொங்குகிறாய்

மணற் கடற்கரை என்றால் 
கொஞ்சம் விருப்பமோ
ஆவலோடு துள்ளி நீந்தி
தொட்டு செல்கின்றாய் (க)

அதிகாலையிலும் அந்தி
வேளைப் பொழுதினிலும்
செங்கதிர் செல்வன் எழில்
ஆதவன் தொட்டு செல்கிறான்

மாந்தர் வேண்டிடும் உப்பை
அள்ளித் தருகின்றாய்
மாந்தர் சென்றிட தண்ணீர்
சாலையாய் மாறுகின்றாய் (க)

துருவத்தில் பனிக் கடலாய்
உறைந்து  நிற்கின்றாய்
தூய வெண் பாற்கடலில்
ஹரி உறைந்து நின்றான்

கொதிக்கும் கனல் தாங்காது
ஆவி ஆகி நிற்கின்றாய்
கொந்தளிக்கும் போது
சுனாமி ஆகி நின்றாய் (க)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்





Wednesday, June 10, 2020

பொங்கும் பனிப்பாறை




கரு நீல பெருங் 
கடல் அழகு
கரை புரளும் 
அலையும் அழகு

அகண்ட நீல 
வானம் அழகு
அலை யெனும் 
முகிலும் அழகு

பனிப் பாறை 
முகப்பு அழகு
படர்ந்து விரிந்த 
காட்சி அழகு

துள்ளும் மீன் 
ன துள்ளிடும்
பொங்கி எழும் 
துள்ளல் அழகு

தூவானம் தொட்டு
விட முயலும்
துள்ளல் இங்கு 
ற்புத அழகு

பொங்கும் வெள்ளி 
பனிப்பாறைகள்
பனிக் கடலில் 
மூழ்கி நின்று

நுரை அலையுடன் 
இணையும் காட்சி
விழி இரண்டிற்கு 
விருந்தோ விருந்து 

வி புனையும் 
கவிக்கு விருந்து
முகமதில் மலர்வு 
மனமதில் மகிழ்வு 

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Sunday, June 7, 2020

இயலும் இயலாது








இயலும் என்பதும் 
     இயலாமை என்பதும் உந்தன் 
இதயம் எடுக்கும் இனிய 
      இறுதி முடிவினிலே

இயலும் சிறிய  
     செயலைக் கூட
இயலாது என    
     தள்ளுவதும்
இயலாமையை 
     தள்ளச் செய்து 
இனிதாய் முடிப்பது  
     இதயமே

இயலுமென 
     நினைத்து விட்டால்
இமயம் கூட 
     சிறு கல் தான்
இயலாதென 
     நினைத்து விட்டால்
இமயமாய் தோன்றும்
     சிறு கல் கூட 

தவிர்த்து நின்றால்
     மலைத்து போவதும்
தகர்த்து நின்றால்
     மலைக்கச் செய்வதும்
தளராது நிற்கும் 
     உந்தன் மனதிலே
தயங்காது செய்யும் 
     உந்தன் செயலிலே

தகர்த்து நின்றால் 
     வாகை சூடலாம்
தவிர்த்து நின்றால் 
     வாடிடும் மனம் 
தகர்த்து நின்றால் 
     வாழ்த்துக்கள் குவியும்
தவிர்த்து நின்றால் 
     வருத்தங்கள் மேலிடும்

இமயத்தைக் கூட
     சிறு கல் ஆக்குவதும்
சிறு கல்லை கூட
     இமயம் ஆக்குவதும்
இதயத்தில் 
     முடிவு செய்யும்
இனிய உந்தன் 
     மனதினிலே

இரண்டிற்கும் உள்ளே 
     இடைவெளி
நூலிழை சிறிய 
     இடைவெளிதான்
இதயத்தில்  துளிர்க்கும் 
     திட நம்பிக்கை 
நம்பிக்கை நம்பிக்கை  
     நம்பிக்கையே 

திறமை இருந்தும் 
     தோற்றுப் போவது
சோம்பல் எனும் 
     தடைக் கல்லாலே
நாளை நாளை என 
     தள்ளி போடாது
இன்றே இனிதே 
     முடித்து விட்டால்

வெற்றி வாகை 
     சூடி விடலாம்
வீர நடையில் 
     நடந்து விடலாம்
வாழ்த்துக்கள் மழையில்
     நனைந்து விடலாம்
வான் புகழை 
     எட்டி விடலாம் கண்ணே

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

நல்ல நண்பன்












நண்பன் இப்படி 
இருக்க வேண்டுமென
நாம் நினையாது

நல்ல நண்பனாய் 
நானிலத்தில் நாம் 
இருந்து காட்டலாமே

நிழலாய் விடாது
என்றும் இருப்போமே
நிஜமாய் நிலைக்
கண்ணாடியாய் இருப்போமே

நயம்பட உரைத்து
நிஜக் கண்ணாடி பிம்பமாய்
நாளும் துணையாய்
நிழலாய் பின் தொடர்வோமே

தக்க சமயத்தில்
மெய் எடுத்து உரைக்காத
நண்பன் நண்பனல்ல

தக்க சமயத்தில்
கை கொடுத்து உதவாத
நண்பன் நண்பனல்ல

நல்ல நண்பனுக்கு
இதுவே அழகு அழகு 

அந்த நல்லதொரு 
நண்பனாய் நாமாய் 
இருந்து காட்டிடுவோமே 

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

கடல் வான தேவதை ~ வெண்ணிலவு

  

            






பரந்து விரிந்த 
பெருங்கடலாம்  
நீலவான 
பெருங்கடலில்     

அணையா துருவ 
ஒளி விளக்கில்
நீந்திச் செல்லும் 
விண்மீன்கள் 

சுழலும் சூரியன் 
மேற்கில் மறையக் 
கரையை தேடும் 
முகில் அலைகள் 

பொலிவை தரும் 
வெண்ணிறத்தில் 
வண்ண ஓவிய 
எழில் முகமாய்

சந்தங்கள் நிறைந்த 
இடி ஓசையுடன் 
மழைச்சாரல் மென்
பூவாய் தூவிட 

குளுமைத் தந்திடும் 
கனி முகமாய் 
வானவில் எனும் 
பட்டுடையில் 

பவனி வரும் 
கடல் தேவதையே 
கண்ணுக்கினிய 
வெண்ணிலவே !

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Saturday, June 6, 2020

பாவையின் பார்வை









இரும்பு நெஞ்சை 
ஈர்த்திடும் காந்த 
விழிப் பார்வையோ !

செங்கோட்டையை 
தகர்த்திடும் கூர்வேல் 
விழிப் பார்வையோ !

வீர வேங்கையைக் 
கவர்ந்திடும் மருண்ட 
மான் விழிப் பார்வையோ !

தவ முனி ரிஷிகளும் 
மயங்கிடும் கயல் 
விழிப் பார்வையோ !

கார் இருளைப் 
பொசுக்கிடும் சுடர் 
விழிப் பார்வையோ !

கூடல் மா மதுரையை 
எரித்திடும் கனல் 
விழிப் பார்வையோ !

இளம் சேயைக் 
கொஞ்சிடும் கருணை 
விழிப் பார்வையோ !

மாந்தர் யாவரையும் 
மயக்கிடும் எழில் ஓர 
விழிப் பார்வையோ !

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

Friday, June 5, 2020

சுற்றுப்புற சூழ்நிலை தினம்











உண்ணும் உணவும்
பருகும் நீரும்
உயிர் மூச்சுக் காற்றும்
இயற்கை துணையாலே

இயற்கை துணையின்றி
உயிர் வாழ இயலுமோ
இயற்கை கறை படியுமின்
வாழ  வேறு வழியேது

நிலமெனும் மடந்தையைக்
காத்து நின்றிட
செழுமைப் பயிர்கள்
விளைந்து கொடுக்கும்

நீரெனும் மங்கையைக்
காத்து நின்றிட
தூயமிகு நீரிங்கு
உலகினில் நல்கும்

காற்றெனும் தூதனை
சுத்தமாய் வைப்போம்
மாசில்லா தூசில்லா
சுற்றுப்புறம் நல்கும்

ஓஸோன் வளையத்தை
காத்து நிற்போம்
சுற்றுப்புற சூழ்நிலையை
தூய்மையாய் வைப்போம்

மாசும் தூசும் 
நிறைந்திருந்தால்
வையத்தில் வாழ்வது 
எங்கனம் எங்கனம்

மதியும் புவியும் 
அதி சூடானால்
வையத்தில் வாழ்வது 
எங்கனம் எங்கனம்

மரம் செடி கொடி
பல வளர்ப்போம்
காடு வளர்த்து
வான் மழை காண்போம்

இனியன நல்கிடும்
இயற்கையைக் காப்போம்
இன்பமாய் வாழ்ந்து
இயற்கையை ரசிப்போம்

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்




Thursday, June 4, 2020

அன்னாசி வெடி ஆனை பலி











பழத்தைக் 
கொண்டு
பலம் காட்டிய 
பலவீனனே

மத கஜ 
யானையைக்
கொல்ல மனம் 
வந்ததே

அன்னாசியில் 
வெடி வைத்து
அன்னம் 
தந்தது ஏனோ

அறியாத 
கர்ப்பிணி ஆனை
அழகு குட்டியுடன் 
மாண்டதே

உன் பிள்ளைக்கு 
வெடி வைத்து 
ஊன் நீ
தருவாயோ

ஊனமாக்கி 
உடலை பொசுக்கி
உள்ளம் உவந்து 
மகிழ்வாயோ 

மனித நேயம் 
எங்கே எங்கே
ஈவு இரக்க குணம் 
எங்கே எங்கே

வாயில் ரத்த 
கசிவுடனே
வயிற்றில் குட்டியுடன் 
பலியிங்கே

நானிலத்தில் 
மானுடர் நீ
விலங்கு குணம் 
கொண்டால்

மானுடன் வேடம் 
ஏனடா நிஜமாய்
விலங்காய் மாறி 
காட்டுக்கு ஓடுடா

அன்னத்தில் விஷம் 
வைப்போரும்
அன்னாசியில் வெடி 
வைப்போரும்

அகிலத்தில் வாழ்ந்து 
என்ன பயனடா
அறவே ஒழிந்து 
போய் விடுடா

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்


Tuesday, June 2, 2020

மிதி வண்டி தினம் 02 06 2020



இரண்டு சக்கர வாகன
எழில் வண்டி நான்
இலகுவாய் ஓடும்
எழில் வண்டி நான் 

இயந்திரமான அவசர 
மிகு உலகினிலே
இனிமை மிகு அழகு
வண்டி நான் (இ)

என்னில் ஏறி மிதித்தாலும்
கவலை கொள்ளேன் நான்
எளிமை வலிமை பொறுமை
மிகுந்த வண்டி நான்

உடலுக்கு உறுதி தரும்
உடற் பயிற்சி சாதனம் நான்
இதயத் துடிப்பை சீராக்கும்
இனிய மருத்துவ சாதனம் நான்

மாந்தர்க்கு வியர்வை தந்து
கொழுப்பை நீக்க உதவிடுவேன்
மனச் சோர்வை நீக்கி நின்று
மன அழுத்ததிற்கு தீர்வாவேன்

மனதிற்கு உற்சாகம் தருவேன்
மனதில் புத்துணர்ச்சி தருவேன்
மாந்தர்க்கு உதவிடும் எந்தன்
பெயர் தான் மிதி வண்டியே 

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்







Monday, June 1, 2020

உலக பெற்றோர் தினம்


கருவினில் தாங்கி நின்று
கடும் வலி தாங்கி நின்று
கருத்தாய் காத்து நின்று
காசினியில் உயிர் தந்த

தன் உதிரத்தை பாலாக்கி
தீஞ்சுவையாய் ஈந்து நின்று
தாலாட்டு பல பாடி நின்று
தியாகம் பல புரிந்து நின்று

தாயன்பு பாசமும் காட்டியே 
தன்னுயிராய் காத்து நிற்கும்
தாயவள் இல்லையெனில்
தனயன் தான் நான் ஏது ?

உதித்தற்கு காரணமாகி
உயரிய உருவும் தந்து
உயிரும் தந்து நின்று
உயிராய் காத்து நின்று

கண்ணும் கருத்துமாய்
காலம் முழுதும் காத்து
கல்விக் கண் தந்து நின்று
கடமை செவ்வனே புரிந்து

அறிவும் பண்பும் கொடுத்து
ஆளாக்கி தந்து நின்ற
அப்பா ஒருவரில்லை யெனில்
அருமைந்தன் நான் ஏது !

ஏழேழு பிறவி எடுத்தினும்
எத்துணை தொண்டு புரிந்தினும்
தீராக் கடன் தீர்க்க இயலுமோ உயர் தாய் தந்தை பெற்றோரிடம் !

பெற்றோர் தின வாழ்த்துக்கள் !


சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்