Wednesday, May 20, 2020

சிவ சக்தி அர்த்தனாரி



சிவனில் பாதி
    சக்தி என்பர்
சக்தியில் பாதி
    சிவம் என்பர் (சி)

சிவனுடன் சக்தியும்
    சக்தியுடன் சிவமும்
இணையும் கோலமே
    அர்த்தனாரி ரூபமே 

சிவ சக்தி ரூபமே
    திவ்ய ரூபமே
சிவ ராம தாஸன்
    பணியும் நாதனே (சி)

அம்மை கருணை பொழிய
    அப்பனவன் காத்து அருள
அம்மையப்பனாய் காக்கும்
    அர்த்த நாரீயே சரணம்

ஆனை முகன் ஒரு புறமும்
    ஆறு முகன் மறு புறமும்
அந்தணர் ஓதி நிற்கும்
    அரு மறை போற்றிடும் (சி)

புலித்தோல் சாற்றிய
    இடை ஒரு புறம்
ஒட்டியானம் அணிந்த
    இடை மறு புறம்

பிறை நுதற் தனிலே
    திரு நீறு ஒரு புறம்
விற்புருவ நெற்றியில்
    குங்குமம் மறு புறம்

கங்கை திங்கள் தாங்கிய
    செஞ்சடை ஒரு புறம்
சுட்டி பதக்கம் சூடிய
    கருங்குழல் ஒரு புறம்

முப்புரி நூல் நாக மணி
    விரி மார்பு ஒரு புறம்
முத்தங்கி மாலை அணிந்த
    மாதர் மார்பு மறு புறம்

வலிமை மிகு தடந்
    தோள் ஒரு புறம்
மென்மை பூத்த கமல
    மேனி மறு புறம்

மஞ்சள் வண்ண பட்டு
    பீதாம்பரம் ஒரு புறம்
பச்சை வண்ண பட்டு
    புடவை மறு புறம்

பாசுபதம் தாங்கும்
     திருக்கரம் ஒரு புறம்
பங்கயம் தாங்கும்
     மலர்கரம் ஒரு புறம்

குண்டலம் ஒரு புறம்
    தாடங்கம் மறு புறம்
கருணை  பொழியும் 
    விழி இரு புறம் (சி)

சிவ ராம தாஸன்
    பணிந்து போற்றும்
சிலம்பு அணிந்த பொற் 
    பாதம் ஒரு புறம்

சலங்கை அணிந்த திரு
    பாதம் மறு புறம்
வீடு பேறு முத்தி தரும்
    பாதம் திரு பாதம் (சி)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: