Friday, May 15, 2020

தமிழ்


தமிழே ! உன் பெருமைக்கு

எல்லை உண்டோ ? தமிழ்

புத்தாண்டே  ! தலை வணங்கி

நின் தாள் பணிந்தோம் (த)

 

அழகினால் அம்தமிழானாய்

அருமையால் அருந்தமிழானாய்

அமுதினால் அமுதத் தமிழானாய்

அணிநலனால் அணித் தமிழானாய்

 

அன்னையினால் 

அன்னைத் தமிழானாய்

அறிவுச் சுடர் ஈதலால் 

சுடர் தமிழானாய்

ஆய கலையினால் 

இயற்றமிழானாய்

அறிவொளியால் 

ஒண்டமிழானாய்

 

இளமை குன்றாமை

கன்னித் தமிழானாய்

இன்பம் தருவதால்

இன்பத் தமிழானாய்

இசையினால்

இசைத் தமிழானாய்

இனிய ஒலிதால்

இன்றமிழானாய்

 

சிந்தை செவி நாவு

இனிப்பதால் தேன் தமிழானாய்

செழித்து வளர்வதால்

பசுமைத்  தமிழானாய்

சுவை பல தருவதால்

சுவைத் தமிழானாய்

செம்மை உடையதால்

செந் தமிழானாய்

 

வளமை குன்றாததால்

செழுந் தமிழானாய்

குளுமையால்

தண்டமிழானாய்

வளமை செறிவதால்

வண்டமிழானாய்

எளிமை நன்மையால்

நற்றமிழானாய்

 

தனித்தன்மையால்

தனித் தமிழானாய்

தாய் மூலமானதால்

தாய்த் தமிழானாய்

தேனினும் இனிமையினால்

தீந்தமிழானாய்

தொன்மையானதால்

பழந் தமிழானாய்

 

பாலினும் தூய்மையால்

பாற்றமிழானாய்

பாகினும் சுவையால்

பாகு தமிழானாய்

பசுமை நிறைவால்

பைந் தமிழானாய்

பல் மங்கலம் தருவதால்

மாத்தமிழானாய்

 

மகிழ்ச்சி ஈதலால்

உகக்குந்தமிழானாய்

முத்திறம் கொண்டதால்

முத்தமிழானாய்

கற்கண்டாயினிப்பதால்

கற்கண்டுத தமிழானாய்

கனிச் சுவையினால்

கனித் தமிழானாய்

 

நாடகச் சுவையினால்

நாடகத் தமிழானாய்

சங்கம் வளர்த்ததால்

சங்கத் தமிழானாய்

காலந்தோறும் வளர்வதால்

வளர் தமிழானாய்

எம் உரிமையால்

எந்தமிழானாய்

 

தெய்வத் தன்மையால்

தெய்வத் தமிழானாய்

நாளும் பொழுதும்

உனை நினையும்

சிவ ராம தாசனுக்கு

அருள் நீயே

சிந்தூர எழில் தீதிலா

தமிழ் தாயே !

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: