Friday, May 15, 2020

முதுமை 2


வான் நிலவு காட்டி நின்று

தேன் அமுதென கொஞ்சி நின்று

மான் புலிகதை சொல்லி நின்று

ஊன் அமுது ஊட்டி நின்றவளை

 

ஆடி ஓடி உழைத்து நின்று

தேடி திரவியம் சேர்த்து நின்று

கூடி மகிழ்ந்து வளர்த்து நின்று

நாடி நரம்பு தளர்ந்து நின்றவரை

 

தோளின் மீது சுமந்தவரை

தோள் வறண்டதாலே துரத்தலாமா

முகத்தில் வரிகள் விழுந்ததாலே

முகவரியை மாற்றலாகுமோ

 

முதியோர இல்லம் தனில்

தள்ளுவது தான் நியாயமோ

முதுமைப் பருவம் தனில்

மனச் சுமை தரலாகுமோ?

 

மெல்லிய மனதினில் ஏக்கம்

ஒட்டிய கன்னத்தில் சுருக்கம்

சுருங்கிய விழிதனில் நீர்தேக்கம்

தலை சுற்றும் மயக்கம்

 

கை காலில் நடு நடுக்கம்

இனம் புரியா மனக் கலக்கம்

தடம் தெரியா வழி மார்க்கம்

சொல்ல முடியா மன துக்கம்

 

முதியோர் இல்லம் நோக்கி

நடைப் பயணம் போகையிலே

முதிய மனம் தளர்ந்து தான் போயிடுமே

நடைப் பிணமாய் தான் மாறிடுவரே

 

அன்னை இல்லம்

கேட்கவில்லை

அனாதை இல்லம்

எதிர் பார்க்கவில்லை

 

அன்னைக்கு இல்லத்தில்

சிறுவிடம் தாராயோ

அன்னையின் வயிற்றிலே

பால் தான் வார்க்காயோ

 

வழித் தெரியாக் காலத்தே

விழித் திரையாய் இருந்தவரை

வழித் தடம் கண்டபின்னே

விழித் திரையைக் கிழிக்கலாமோ

 

பட்டு மரமாய் இருக்கையிலே

பட்டுக் குட்டி நீ வந்து

வட்டமிட்டு வலம் வந்து

இட்டமிதை வாங்கி நின்று

 

பட்ட மரம் ஆனதாலே

வெட்டி விடலாகுமோ

மட்ட குணம் கொண்டு நீ

எட்டி வைக்கலாகுமோ

 

பால் பாயாசம் கேட்கலையே

கால்வயிறு கஞ்சியில் மகிழ்வரே

பஞ்சு மெத்தை கேட்கலையே

கோரைப்பாய் நித்திரையில் மகிழ்வரே

  

மாட கோபுர

மாளிகை கேட்கலையே

கூரைவேய்ந்த

குடிசையில் மகிழ்வரே

 

பேரனுடன் கொஞ்சி

ஆட துடிப்பரே

பேத்தியின் சிகை

முடிக்க துடிப்பரே

 

இருந்த பொழுதே

படி அளக்காது

இறந்த பின்

படையல் வைத்து

 

தேக்கு மர

சட்டம் வைத்து

சந்தனமாலை

போட்டு என்ன பயன்?

 

காலம்தான் உருண்டோடும

ஆண்டு ஒன்று கூட போகும்

வயது ஒன்று கூட ஏறும்

முதுமைப் பருவம் காண நேரும்

 

முதுமை ஒரு சாபம் அல்ல

முதுமை இல்லம் அனுப்பாவிடின்;

முதுமை ஒரு சாபக் கேடு

முதுமை இல்லம் அனுப்பிவிடின்;

 

குழந்தையும் தெய்வமும்

ஒன்றன்றோ

குழந்தையின் பிம்பமாம்

முதுமையும் தெய்வமன்றோ

 

அவனியில் பிறந்திட

உயிரைத் தந்தவராம்

கண்ணெதிர் தெய்வம்

இருக்கையிலே போற்றுவோம்.

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்



No comments: