Sunday, May 17, 2020

பரத நாட்டியம்


பரத முனி தந்த வழி தனிலே
பாரதம் கண்ட கலையன்றோ
பதம் பிடித்து ஆடுகையிலே
பாவம் காட்டும் கலையன்றோ !

மத்தள நட்டுவாங்க ஒலியுடனே
ஜதிகள் நிறைந்த தாளமுடனே
ராகம் நிறைந்த கவி பாடலுடனே
அபிநயம் காட்டும் கலையன்றோ !

வீணை இசையினில் நாதம் உதிக்க 
கானக் குரலினில் கீதம் ஒலிக்க
கொஞ்சும் சலங்கை சிலம்பொலிக்க
பாதம் பதித்து ஆடும் கலையன்றோ !

இடது பாதம் தூக்கி நிறுத்தி
இடது பாகம் ஈந்த ஈசனும்
இமைகள் தூக்கி விழிகள் அசைய
நவரசம் காட்டிடும் கலையன்றோ !

நடனக் கலையில் ஒன்றாய் திகழும்
பக்தி மார்க்கத்தில் ஒன்றாய் திகழும்
இறை கழல் பற்றிட உதவும் கலையே
பாரத தேசத்து பரதக் கலையன்றோ !

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: