Friday, May 15, 2020

வாழ்க்கை ஒரு புத்தகமே


வாழ்க்கையொரு புத்தகமே

நவரச அனுபவமிகு

பக்கங்கள் நிறைந்ததொரு

காவிய புத்தகமே

 

அச்சத்தைக் கொடுத்திடும்

ஆனந்தம் தந்திடும்

ஆச்சர்யமும் தந்திடும்

பக்கங்களும் உண்டு

 

சினத்தை மூட்டிடும்

வீரத்தைக் காட்டிடும்

நகைச்சுவை தந்திடும்

பக்கங்களும் உண்டு

 

வருத்ததைத் தந்திடும்

வெறுப்பும் தோன்றிடும்

அமைதியைத் தந்திடும்

பக்கங்களும் உண்டு

 

ரகசியம் காத்திடும்

இனியன பகிர்ந்திடும்

காதலைப் புரிந்திடும்

திருப்பங்களும் உண்டு

 

மெய்யும் பொய்யும்

கலந்து இருந்திடும்

நட்பைக் காட்டிடும்

பக்கங்களும் உண்டு

 

பள்ளி படிப்பு பாதை

பணியென பாதி கழித்தோம்

பள்ளி கொண்ட தூக்கத்திலே

பாதியில் பாதி கழித்தோம்

 

இறப்புக்கும் பிறப்புக்கும்

இடைவெளி கொஞ்சமே

இடைப்பட்ட காலத்தில்

இனிதே வாழ்வோமே

 

வருகையிலே ஏதுமில்லை

போகையிலே ஏதுமில்லை

போட்டி பொறாமை கொண்ட

வாழ்க்கை தான் எதற்கு?

 

வெற்றி தோல்வியும்

உயர்வும் தாழ்வும்

திருப்பங்கள் நிறைந்த

பக்கங்களும் உண்டு

 

புரட்டிடப் புரட்டிடப்

புதுமைகள் தோன்றிடும்

படித்திடப் படித்திட

பரவசம் தந்திடும்

 

பக்கங்கள் புரட்டாது

சோர்ந்து இருந்திடின்

சுவாரஸ்யம் இல்லாது

சலிப்பைத் தந்திடும்

 

மறந்திட நினைத்திட

இரு வரம் பெற்றோம்

நல்லவை நினைந்திட

மற்றவை மறந்திட

 

என்றென வாழ்ந்தால்

நிம்மதியைத் தந்திடும்

வாழ்வினைக் கொண்டு

மகிழ்வுடன் வாழ்வோம்.



சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: