Thursday, May 14, 2020

இயற்கை


இயற்கையும் இறையும்

இரண்டு அல ஒன்றே

இயற்கை வளம் கண்டின்

இறையருள் நல்குமே

 

    இருந்து வாழ்ந்திட

    நில மடந்தையாய்

    அருந்திட பருகிட

    நிறைந்த நீராய்

 

சுவாசித்து வாழ்ந்திட

பிராண வாயுவாய்

சுவைத்திட எரிமூட்டும்

அக்னி நெருப்பாய்

 

    பறந்து மகிழ்ந்திட

    பரந்த ஆகாயமாய்

    பஞ்ச பூதங்களாய்

    துணையாய் நிற்கும்

 

அரணாய் மலையும்

கரணாய் ஆதவனும்

பொலிவாய் நிலவும்

பலவாய் விண்மீனும்

 

    விண்ணை முட்டிடும்

    உயர்ந்த சிகரமும்

    ஊற்றாய் அருவியும்

    தொடர் பள்ளத்தாக்கும்

 

நெளிவு சுளிவாய்

அழகிய பாதையும்

மழை பொழிந்திட

எழில்மிகு மரங்களும்

 

    பசுமை  நிறைந்த

    இலையும் பயிரும்

    கனிந்து தொங்கிடும்

    வண்ணமிகு கனிகளும்

 

நீல நிற வண்ண

கடலும் வானமும்

கோடைக் காலத்து

பட்டொளி வெயிலும்

 

    வசந்த காலத்து

    இளந் தென்றலும்

    கார் காலத்தே

    பொழியும் மழையும்

 

இளம்பனி காலத்தே

சில்லென குளிரும்

துள்ளி வரும் நதியும்

துள்ளாத பாறையும்

 

    பூத்துக் குலுங்கிடும்

    நறுமணம் தந்திடும்

    நிறைமிகு வண்ணமொடு

    நந்தவனச் சோலையும்

 

இசையைத் தந்திடும்

கூவும் குயிலும்

வானவில் தோற்றமும்

வண்ணமிகு முகிலும்

 

    விண்ணைப் பிளந்திடும்

    முழங்கிடும் இடியும்

    கண்ணப் பறித்திடும்

    மின்னல் ஒளியும்

 

சந்தி வேளையில்

அந்தி மழையும்

ஆலங் கட்டியும்

அற்புதக் காட்சியும்

 

    பதுங்கிட குகையும்

    பொங்கிட எரிமலையும்

    அடர் பெருங்காடும்

    சுடர் பாலைவனமும்

 

கானல் நீரும்

கனிம வளமும்

நவமணி தான்யமும்

நவரத்ன மணியும்

 

    மூன்றாம் பிறையும்

    முழு நிறை மதியும்

    விடியற் காலையும்

    மயக்கும் மாலையும்

 

பௌர்ணமி நிலவில்

பொங்கும் அலையும்

கண்கவர் நீள்மிகு

கடற்கரை மணலும்

 

    ஊர்வன பறப்பன

    நடப்பன மிதப்பன

    பற் பல விதமாய்

    எண்ணற்ற படைப்பும்

 

ஆழ் பெருங்கடலும்

அடர்பனி மலையும்

தீவும் தீபகற்பமும்

தட்ட சமன் வெளியும்

 

    அண்ட பேரண்டமும்

    அணுத் துகள்களும்

    அகண்ட கண்டங்களும்

    அற்புத கோள்களும்

 

கண்ணுக்கு விருந்தாய்

மனதினைக் கவர்ந்திடும்

இயற்கையைப் போற்றி

இனிதாய் காத்திடின்

 

    இனிய வாழ்வும்

    இறை அருளும்

    இல்லம் நாடி வந்து

    இன்புறச் செய்யுமே

 

இயற்கையைப் போற்றி

இன்னல் தவிர்ப்போம்

இயற்கையோடு ஒத்து

இனிதாய் வாழ்வோம்.


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்




No comments: