Friday, May 15, 2020

திருமண வைபவம்



இரு மனம் சேர்ந்திடும்

ஈருடல் இணைந்திடும்

ஒரு மனமாய் வாழ்வதே

திரு மண வைபவமே

 

அருமறை ஓதி நிற்கும்

அக்னி சாட்சியாய் நிற்கும்

ஆன்றோர் போற்றி நிற்கும்

ஆயிரம் காலத்துப் பயிரே

 

அறு சுவை விருந்துடனே

நறு மண தாம்பூலத்துடனே

இரு வீட்டார் வரவேற்புடனே

குரு வருள் திருவருளுடனே

 

சொந்தம் பந்தம் கூடி நிற்க

வந்த நண்பர்கள் குலவி நிற்க

சந்தனமிகு நறுமணமொரு

சுந்தரமான திருமணமே.

 

மும்முடிச்சு யாதெனில்

முப்பாலின் நெறியை

தப்பாமல் பின்பற்றி

எப்பாலும் வாழ்வதே.

 

அன்புடன் வாழ்த்தியே

அட்சதையைத் தூவுவதே

அன்னம் பஞ்சமின்றி

அழகாய் வாழ்வதற்கே.

 

வாழை தென்னைத்

தோரண அலங்காரம்

எக்காலமும் பகிர்ந்து

பயனுடாய் வாழ்வதற்கே

 

மெட்டியை அணிவதே

வாழ்வியல் பொறுப்பைச்

சுட்டிக் காட்டி நிற்கும்

கால்கட்டின் அடையாளமே.

 

அம்மியை மிதித்து

அருந்ததி பார்ப்பது

அம்மியைப் போல

மனவலிமை தருவதற்கே

 

மங்கள வாத்ய இசை

அபசகுன வார்த்தையும்

அமங்கல வார்த்தையும்

ஏதும் கேளாது  இருக்கவே

 

உள்ளம் ஒன்று பட

மன மாற்றம் தேவை

உணர்த்திடும் தேவை

மாலை மாற்றுதலே

 

சடங்குகள் யாவையும்

வெறும் சம்ப்ரதாயமல்ல

இல்வாழ்வு சிறந்திடவே

தந்திடும் நம்பிக்கையே

 

காலம் தொட்டு வந்திடும்

சீலம் மிகுந்த பண்புடன்

குலம் சீருடன் புரிந்திடும்

கோலம் திருமண வைபவமே.

 

பதினாறு பெற்று பெருவாழ்வுடனே

நவ மணி தான்யப் பொருளுடனே

அட்ட லட்சுமியின் திருவருளுடனே

ஏழு ரிஷி முனிகளின் அருளுடனே

 

ஆறு படைவீடு நாதன் துணையுடனே

பஞ்ச பூதங்களினின் சாட்சியுடனே

நான் மறை வேத கோஷங்களுடனே

மூன்று முடிச்சு மங்கல நாணுடனே

 

இரு மனம் இணைந்து நீடூழியே

ஒரு மனதுடன் அன்பாய் வாழும்

அருமை மிகுந்த ஒரு வைபவமே

திருமண ஆனந்த வைபவமே.


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: