Thursday, May 14, 2020

தியாகிகள் தினம்


தன்னை உருக்கி

திண்ணிருள் நீக்கி

தீப ஒளி தந்திடும்

மெழுகினைப் போல

 

தன்னை ஈந்து

தன் குலம் ஈந்து

தீஞ்சுவை சுவை தரும்

தென்னைப் போல

 

தன் தலை ஈந்து

தன்னை மாய்த்து

தீச்சுடர் ஒளி தரும்

தீக்குச்சி போல

 

இலையுடன் நாருடன்

பூவுடன் காயுடன்

சுவை மிகு பழமதை

தரும் வாழை போல

 

தன் குருதியை ஈந்து

பால் மோர் தயிருடன்

வெண்ணெய் நெய் தரும்

பசுவினைப் போல

 

தன் தோலினைச் சீவி

கூர் முனையாக்கினும்

எழுதிட உதவி தேய்ந்து

போகும் கரிக்கோல் போல

 

தன்னலம் பாராது

கருவினைத் தாங்கி

உயிர் அன்பு பாசம்

தரும் தாயைப் போல

 

தன்னலம் துறந்து

தன் சுகம் மறந்து

தன் பொருள் ஈந்து

தன் உடல் தந்து

 

பதவி பட்டம் சொத்து

மனை மக்கள்

யாவும் துறந்து

வீர முழக்கமிட்டு

 

பிரம்படி சவுக்கடி

குண்டடி பட்டு கடும்

சிறை சென்று செக்கு

இழுத்து குருதி ஈந்து


இன்னது என சொல்லா

அல்லற் பல பட்டு

இனிய சுதந்திர சுவாசக்

காற்றினை தந்திட

 

இன்னல்கள் பற் பல

இன்முகமுடன் ஏற்ற

இந்திய பாரதத் தாயின்

வீர தீர மைந்தர்கள்

 

தன்னலம் அற்று

நம் நலம் கண்ட

தியாகிகள் தினமதை

போற்றி நினைவோம்

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: