Thursday, May 14, 2020

தமிழ்த் தாய்


கற்றறிந்த பன்

மொழிகளிலே

நற்றமிழுக்கு ஈடு

இணையில்லையே

கொற்றவர் வீர

மூவேந்தர்களும்

போற்றி வளர்த்த

மொழியன்றோ!

 

கற்றறிந்த

சபை தனிலே

சிற்றறிவு தமிழ்

ஞானத்திலே

சொற்றொடர்

பாமாலை சூடி

போற்றிப் புகழ்

பாட வந்தேன்

 

சிற்றிடை மென்

மெல்லிடையாள்

வேற்று மொழியினும்

வலிவுடையாள்

சேற்றினில் பூத்த

செம்மொழியாள்

பொற்றாமரை

வண்ணமுடையாள்

 

தோற்றமோ தொல்

தொன்மையிலே

ஏற்றமோ வான்

புகழ் அமரர்வரை

பெற்ற தாய்க்கும்

தாய் அல்லவோ

எற்றைக்கும் நம்

உயிர் மூச்சன்றோ

 

முற்றும் அறிந்த

முனி அகத்தியனும்

மற்றும் கம்பன்

திரு வள்ளுவனும்

எற்றைய புரத்து

கவி பாரதியும்

நேற்றைய கால

வாலி கண்ணதாசனும்

 

பற்று கொண்டு

கவி புனைந்தனரே

பெற்ற தாயினும்

மேலே போற்றினரே

வற்றாத ஜீவ

தேனமுது நதியன்றோ

வீற்றிருந்தாள் நம்

இதய சிம்மாசனத்திலே.


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்




No comments: