Friday, May 15, 2020

பாடும் பாமாலை


சிந்தை உவந்து மகிழ்ந்திடவே

நெஞ்சமதில் வந்தமர்ந்தேன்

சிந்தனையெனும் ஓட்டத்தில்

எண்ணமாய் உதித்து நின்றேன்

 

உயிரும் மெய்யுமாய் கலந்து

எழுத்தாய் உருமாறி நின்று

அங்கும் இங்குமாய் இணைந்து

வார்த்தை வடிவினில் நின்றேன்

 

எதுகை மோனை சந்தமொலிக்க

வார்த்தை பல கோர்த்து நிற்க

புலமை நயம் ஓங்கி நிற்க

புதுமை பூத்து குலுங்கி நிற்க

 

பா புனையும் சிவ ராம தாஸன்

புலமை கவி நடையினிலே

பாமாலை வடிவம் கொண்டு

பாரில் எழில் உலா வந்தேன்

 

பக்தர் தம் இனிய நாவினில்

பிரம்மன் சிரசில் அமர்ந்திடும்

பாரதி நர்த்தனம் ஆடிடவே

பாடல் கீதமாய் மாறி நின்றேன்

 

பூமாலையை சூடி நின்றிடும்

இறையின் திருவருளாலே

பரமனின் இன் செவி மடுக்கும்

தேன் சிந்தும் பாமாலை நானே !

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: