Friday, May 15, 2020

தண்ணீர் வறட்சி


அகம் மகிழ்ந்திட முகம் மலர்ந்திட

தாகம் தணித்திட  தேகம் சிலிர்த்திட

சோகம் விலகிட போகம் விளைந்திட

ஜகம் வேண்டுவது மழை தரும் மேகம்

 

நேரம் பொன் போன்றதென்பர்

காலம் கண் போன்றதென்பர்

தண்ணீர் உயிர் போன்றதன்றோ

உயிரினும் மேலானது அன்றோ

 

மழை நீரை தான் சேமிப்பாரில்லை

வெயில் வறட்சி விடுவதாயில்லை

மழை மேகமும் வருவதாயில்லை

காவிரி நீரைப் பகிர்வதாயில்லை

 

மரம் வளர்த்து இயற்கை போற்றி

இருந்தின், ஏரி தூர் வாரி இருந்தின்,

மழையில் சேமிப்பு கண்டிருப்போம்

கவலை இன்றி வாழ்ந்து இருப்போம்

 

மறைந்த நேரமும் கடந்த காலமும்

உறைந்த உயிரும் இறைந்த நீரும்

மீண்டும் வாராதே சேமிக்காது விடின்

இல்லாத நேரத்திலே பேசி என் பயன்?

 

நெஞ்சு நிறைந்து கால் நனைந்து அன்று

கால்வாயும் வாய்க்காலும் கண்டோமே

நெஞ்சு வெம்பி கையேந்தி பயிருக்கும்

வாய்க்கும்  கெஞ்சி நிற்கிறோம் இன்று

 

தண்ணீர் இறைத்து அள்ளிக் குடிக்கையிலே

மதிப்பை உணர்ந்தோம் சிக்கனம் கண்டோம்

ஆழ் துளைக்குழாய் வழி வந்ததாலோ இன்று

மதிப்பை உணராது விரயம் செய்கிறோம்

 

தண்ணீர் திவலையை இறைந்து நின்றதால்

கண்ணீர் கவலையில் நிறைந்து நிற்கிறோம்

வாட்டும் வெயில் வாடிடும் மனது இங்கே

காட்டும் வறட்சி காணிடும் தாகம் இங்கே

 

சீமைக் கருவேலம் இழுத்தது கொஞ்சம்

சீமைக் குளிர்பானம் எடுத்தது கொஞ்சம்

மணல் கொள்ளையில் இழந்தது மீதி

குடிநீர் சுத்தகரிப்பில் இழந்தது மீதி

 

நெஞ்சமே நீ எதிர் கொண்டு விடு

பஞ்சம் வருவதை எதிர் கொண்டு விடு

சஞ்சலம் மனதில் கொள்ள வேண்டாம்

கஞ்சனாய் தண்ணீர் செலவழித்து விடு

 

நாடும் அரசும் செய்ததென்ன என

கேள்வி கேட்க நேரமும் இல்லை

மாந்தர் யாவரும் ஒன்றாய் இணைந்து

மாற்று வழியைக் காணும் தருணமிது

 

சிக்கனம் சிக்கனம் சிக்கனம் ஒன்றே

செவ்வென செவ்வென சிங்கார வழி

மனமே விழித்திடு சிந்தனை புரிந்திடு

சிக்கனமாய் செலவிடு சுகமாய் இருந்திடு

 

நீரின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது உழவு

மழையின்றி வாராது நீர்

மரமின்றி வாராது மழை

 

ஏரி கிணறுகளைத் தூர் வாரிடுவோம்

எரி கரியாக்கலைக் குறைத்திடுவோம

புவி சூடாக்கலைத் தடுத்திடுவோம்

நதி நீர் தனை இணைத்திடுவோம்

 

கடல் தண்ணீரை  குடி நீராக்குவோம்

மரம் பல வளர்த்து மழை காண்போம்

நெகிழி பயன்பாட்டைத் தவிர்ப்போம்

விரயம் செய்யாது சிக்கனம் காண்போம்

 

நீர்க் கசிவு  தனைத் தடுத்திடுவோம்

நிரம்பி வழிவதைத் தவிர்த்திடுவோம்

நீரை அளவாகப் பயன்படுத்திடுவோம்

நீர் மறு பயன்பாடை வளர்த்திடுவோம்

 

சிறு துளி பெரு வெள்ளம் ஆகும் அன்று

பெரு வெள்ளம் ஒரு துளியானது இன்று

ஒரு துளியே அரு அமிர்தம் இன்று, மனமே

சிறுக சேர்த்து கரு மேகத்தை வேண்டிடு

 

வருக கை கோர்த்திட பெருக பேருவகை

மறுக வீண் விரயம் மாறுக அதி விரைவில்

தருக ஒத்துழைப்பு சிறுக செலவழித்திடுக

பருக நீரினை கருக நீல வண்ணமிகு வானம்


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்




No comments: