Wednesday, May 13, 2020

இலை



இலையே ! இலையே ! 
இலையே ! 
இளம் பச்சை நிறத்து
இலையே !
வெவ்வேறு பெயரில்
உலவி வரும்  (இ)

வடிவழகால் உன் பெயர் 
மாற்றமோ ! இல்லை
தமிழ் மொழி சொல் வளத்தால்
பெயர் மா....ற்றமோ ! (இ)

நெற் பயிராய் இருக்குங்கால்
தாள் என பெயர் கொண்டாய்
சுவை மிகு இலைக் கறியாலே
கீரை என பெயர் கொண்டாய்

கருப்பஞ்செடி வடிவத்தில்
தோகை என பெயர் கொண்டாய்
தென்னை பனை சேயாகி
ஓலை என பெயர் கொண்டாய் (இ)

தாழை என்னும் வடிவினிலே
எழில் மடல் ஆகி நின்றாய்
காய்ந்த நிலைப்பாடினிலே
சருகு ஆகி தளர்ந்து நின்றாய்

ஆடு உண்ணும் தளிர் தனில்
தழை  எனும் பெயர் கொண்டாய்
நீள மிகு கோரை வடிவில்
புல் எனும் பெயர் கொண்டாய்  (இ)

தாம்பூலம் தரிக்கையிலே
வெற்றிலையாய் மாறி வந்தாய்
திருமண வைபவத்தில் தலை
வாழையில் சுவை தந்தாய்

தென்றல் வந்து வீசும் போது
மெல்ல ஆடி இனிமை தந்தாய்
புயல் வந்து தாக்கும் போது
ஆட்டம் கொண்டு மடிந்து நின்றாய் (இ)

ஆலிலை வடிவு தனில் நீ
ஆண்டவனைத் தாங்கி நின்றாய்
அந்திமக் காலம் தனில் குப்பைக் 
கூளம் கோலம் கொண்டாய் (இ)

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்



1 comment:

KK said...

Very nice!